Total Pageviews

Saturday, May 21, 2011

இதுக்கு பெயர்தான் சினிமா


இயல்பான வாழ்க்கையை மிகவும் அற்புதமாக சினிமா வடிவத்தில் வழங்குவதில் ஈரானிய சினிமாவுக்கு இணை அவர்கள்மட்டுமே தான். போலியான, மனித வாழ்வில் சாத்தியமே இல்லாத கதைகளை சினிமா திரைக்கதைகளாக உருவாக்கி பார்வையாளர்களை மனநோயாளிகளாகவும், கற்பனை உலகில் வாழ்பவர்களாகவும் இன்றைய சினிமா மாற்றிக் கொண்டிருக்கிறது. சினிமா என்றாலே பலர் அதனை விரசம்,காமம்,போலிக்காதல்,போலி என்றே பலர் கருதுகின்றனர். ஆனால் ஈரானிய சினிமாக்களோ மக்களின் இயல்பு வாழ்க்கையை சினமாவாக மாற்றி மனிதர்களின் உணர்வுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இயல்பு வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இவ்வளவு அழகான திரைக்கதைகளை அமைக்க முடியுமா என்று எம்மை இத்திரைப்படங்கள் வியக்க வைக்கின்றன. அப்படியான இயல்பு வாழ்க்கையை அற்புதமாக படம்பிடித்துக் காட்டும் ஒரு திரைப்படத்தைப் பற்றி நாம் இங்கு பார்க்க போகிறோம்.

நான் மேற்கூறப்பட்டவாறான திரைப்படங்களில் ஒன்று தான் THE SONG OF SPARROW. மிகவும் அற்புதமான கதைக் கருவை கொண்ட அழகான திரைப்படம். திரைப்பட துறையில் பல சாதனைகள் செய்த ஈரானிய இயக்குனர் மாஜித் மஜீதியின் கைவண்ணத்திலான திரைப்படமே இது ஈரான் என்றாலே அணுஆயுதமும் பாலைவனமும் தான் பலரின் மனதில் தோன்றும் ஆனால் நீங்கள் இந்த திரைப்படத்தை பார்த்தால் இதில் காட்டப்படும் அழகிய கிராமம் தான் உங்களுக்குள் தோன்றும் அவ்வளவு அழகாக இயக்குனர் ஈரானின் ஒரு கிராமத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

கரீம் ஒரு எளிய குடும்பத்தின் தலைவன். அவன் வேலைப்பார்ப்பது கோழிகளை (நாரைகளை) பாரமரிக்கும் ஒரு பண்ணையில். அவனின் குடும்பம் மிகவும் சிரியது மனைவி,இரண்டு மகள், ஒரு மகன். மூத்தமகள் ஹனீயாவுக்கு காது சரியாக கேட்பதில்லை ஒரு கருவியின் உதவியுடனேயே அடுத்தவர்கள் பேசுவதை கேட்பவளாக இருக்கிறாள். இவரின் மகன் ஹஸனுக்கு மீன்கள் என்றால் கொள்ளை பிரியம். அவளுக்கு அடுத்த மாதம் பாடசாலை இறுதிப் பரீட்சை. ஹஸன் தன் சகோதரி ஹனீயாவுடன் ஒரு தண்ணீர் தேங்கும் ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவளின் கேட்கும் இயந்திரம் தண்ணீரில் விழுந்து தொலைந்துவிடுகிறது. ஆனாலும் ஒருவாராக தந்தையின் உதவியுடன் அந்த இயந்திரத்தை தண்ணீர்லிருந்து தேடி எடுக்கிறார்கள். அந்தக் காட்சியை என்னால் முடிந்தவரை தமிழில் மொழிபெயர்துள்ளேன். இதோ அந்தக் காட்சி உங்கள் பார்வைக்காக...





கரீம் தன் நிறுவனத்தில் போய் தனது நிலையை கூறி கடன் கேட்கிறான். அவர்களும் நாளை பார்த்துக் கொள்வோம் என்கிறார்கள். அடுத்த நாள் பண்ணையை இவர் கண்காணிக்கும் போது ஒரு   கோழி பண்ணையைவிட்டு தப்பியோடுகிறது. பல முறையில் அதனை பிடிக்க கரீம் முயற்சி செய்கிறார். அவர் அதனை பிடிப்பதற்கு எடுக்கும் முயற்சியையும் மிகவும் அற்புதமாக இயக்குனர் படக்காட்சியாக அமைத்துள்ளார். மேற்கூறிய அவ்வற்புதமான காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.




என்ன முயற்சி செய்தபோதும் அவரின் முயற்சி பயனளிக்கவில்லை. அடுத்த நாள் கரீம்க்கு ஒரு அதிர்ச்சியான செய்தி அது தான் கரீம் வேலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தி. கரீம் மகளுக்கு எப்படி கேட்கும் கருவியை எடுத்துக் கொடுப்பேன் என்ற யோசனையுடன் வீட்டுக் செல்கிறார். குறைந்த செலவில் அக்கருவியை திருத்த முடியுமா என்று அவர் பலரிடம் அதனை காட்டிப் பார்க்கிறார். அதில் ஒருவர் கூறுகிறார் ஒரு வேளை தலைநகர் தெஹ்ரானில் இதனை திருத்தி கொள்ளலாம் எனக் கூறுகிறார். கரீம் அடுத்த நாள் காலையிலேயே தனது பழைய மோட்டார் சைக்கிளில் தெஹ்ரானுக்கு செல்கிறார். அங்கிருப்பவர்களும் கையைவிரிக்கிறார்கள். இந்தக் கருவி முழுமையாக பழுதடைந்துவிட்டது நீங்கள் புதிய கருவி ஒன்று வாங்குவதே சிறந்தது என்கிறார்கள். தொழிலையும் இழந்த கரீம் எப்படி இவ்வளவு விலை கூடிய ஒரு பொருளை வாங்குவேன் என்ற எண்ணத்துடன் அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறார்.

அங்குதான் கரீம்க்கு அதிஷ்டம் வேலை செய்கிறது. கரீம் தனது மோட்டார் சைக்கிளில் ஏறும் போது கரீம் டாக்ஸி தொழில் செய்பவன் என்று நினைத்து அவனை சவாரிக்கு அழைக்கிறார். அந்தச்சவாரியின் மூலம் கரீம்க்கு நல்ல வருமானமும் கிடைத்தது. அதை தொடர்ச்சியாக தொழிலாக கரீம் செய்ய ஆரம்பிக்கிறான். ஓவ்வொரு நாளும் கரீம் வீடு செல்லும் போதும் பழைய கட்டிடப் பொருட்கள் வீசும் ஒரு இடத்திலிருந்து பழைய பொருட்களையும் வீட்டுக்கு கொண்டு சென்று சேர்த்து வந்தான். அதில் ஒரு முக்கியமாக ஒரு கதவை பத்திரமாக அவன் கொண்டு போய் அவனின் வீட்டுக்கு பொறுத்த வைத்திருந்தான். அந்தக் கதவை கரீமின் மனைவி அயல் வீட்டுக்கு கொடுத்துவிட்டாள் இதனை கேள்விப்பட்ட கரீம் கடும் கோபத்துடன் அயல் வீட்டுக்கு சென்று கதவை எடுத்து வருகிறான். இதை பார்த்த மனைவி இரவில் மிகவும் மனவருத்தத்துடன் அழுகிறாள். மனைவி அழுவதை பார்த்த கரீம்க்கு மிகவும் மனக்கஷ்டமாக இருந்தது ஆனாலும் கரீம் தனது மனைவியை ஒருவாராக சமாதானப்படுத்துகிறார். இந்த இரண்டு காட்சியையும் இயக்குனர் மிகவும் அற்புதமாக இயல்பு குன்றாமல் அமைத்திருக்கிறார். அந்தக் காட்சியும் இதோ உங்கள் பார்வைக்கு...







இப்படியே சில காலம் செல்கிறது. ஒரு விடுமுறை நாள் கரீம் தான் சேர்த்து வைத்திருந்த பழைய பொருட்களை ஒழுங்குபடுத்தும் போது டமார் என அதனுள் விழுந்து கடுமையாக காயப்படுகிறான். கரீம்க்கு தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அவனின் மகன் தனது மாமாவுடன் சேர்ந்து கூலி தொழில் செய்ய ஆரம்பிக்கிறான். அந்தக் காட்சி....




ஒரு கட்டத்தில் வேளை செய்து கலைப்படைந்த மகன் உறங்கும் போது அவனின் வேளையின் காரணமாக கைகளில் ஏற்பட்டுள்ள தழும்புகளை பார்த்து மிகவும் கவலைப்படுகிறான்.


தனது தந்தை உடலால் காயமடைந்திருக்கும் நேரத்தில் தனது தந்தையின் உள்ளம் காயமடையக் கூடாதே என்பதற்காக தனக்கு நன்றாக காது கேட்கிறது போல் மூத்தமகள் நடிக்கப் போய் தந்தையிடம் மாட்டிக் கொள்ளும் காட்சி மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது.


கரீமின் மகனுக்கு மீன்கள் என்றால் கொள்ளை ஆசை அதற்காக பூக்கள் விற்று பணம் சேர்ப்பதற்காக சென்றபோது தன் தந்தையிடம் அகப்பட்டுக் கொள்ளும் காட்சியும் நன்றான அமைந்துள்ளது.




கரீமின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கஷ்டப்பட்டு பணம் கொடுத்து வாங்கிய மீன்கள் தரையில் விழும் காட்சி மகிவும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் தனது உணர்வை வெளிப்படுத்தும் விதம் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. மீனை இழந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் அந்த பிள்ளைகளை அவர் ஆறுதல்படுத்தும் விதம் மனதில் அப்படியே பதிந்து நிற்கிறது.





இன்னும் குடும்பங்களில் இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகளையும் அதில் இருக்கும் அளவில முடியா மகிழ்ச்சியையும் எங்களுக்கும் உணர வைக்கிறார் இயக்குனர்.


இந்த படம் எளிமையான வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களையும் அதைவிட அதில் இருக்கும் அளவிட முடியா மகிழ்ச்சியையும் அழகாக எடுத்துக் காட்டுகிறார். அது மட்டுமல்ல எளிமையான வாழ்க்கையில் இத்தனை இன்பங்களா என்று கூட எங்களை சிந்திக்க வைக்கிறது. இந்த அருமையான திரைடப்படம். கடைசி வரை இப்படம் எங்கள் உணர்ச்சியுடன் பேசுகிறது என்றே சொல்லாம். 


இத்திரைப்படத்தின் பின்னணி இசை அதை கேட்டுப்பார்த்தால் உங்களுக்கு புரியும். இன்று சமூகத்துக்கு இப்படியான திரைப்படங்கள் தான் தேவை போலியான காட்போட் வீரர்களும் கற்பனை உலகில் மனிதனை வாழவைக்கும் சினிமாவை விட இந்த சினிமா மிவும் அருமையென்றே கூற வேண்டும்.

முடிந்தவர்கள் இந்தப்படத்தை முழுமையாக பாருங்கள் ஒரு வித்தியாசமான ஒரு திரைப்படத்தைமட்டுமல்ல ஒரு வித்தியாசமான வாழ்க்கை முறையை பார்த்த அனுபவமும் உங்களுக்கு கிடைக்கும. இங்கு சொல்லப்பட்டவை அந்திரைப்படத்தில் 10 வீதம் தான்.
இது சம்பந்தமாக உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறோம்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/05/blog-post_21.html"

3 comments:

  1. அருமையான பதிவு...சப் டைட்டில் நல்லா இருக்கு..ஆனால் எழுத்துருவின் அளவை மற்றும் எழுத்துக்களின் வடிவங்களில் கவனம் தேவை.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி சகோதரரே உங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete