Total Pageviews

Friday, October 15, 2010

மூளை வளருகிறது - நாம் தான் அதை தடைசெய்கிறோம்

மூளை வளருகிறது - நாம் தான் அதை தடைசெய்கிறோம்


"உனக்கு மூளையே கிடையாதா? என்று யாரையும் திட்டாதீர்கள். எல்லோருக்கும் மூளையிருக்கிறது. அதுமட்டுமின்றி தினமும் மூளை வளருகிறது! ஒவ்வொரு நாளும் புதிதாக குறைந்தது 10,000 நியூரான் செல்கள் (நரம்பு செல்கள்) மூளையில் பிறக்கின்றன. பிறந்த ஒரு சில நாட்களிலேயே அழிந்துவிடுகின்றன. தினமும் புதிதாக நரம்புசெல்கள் பிறந்து உடனே அழிந்து போவதால் என்ன பயன்? மூளை வளருகிறது என்று எப்படி சொல்வது? புதிதாகப் பிறந்த நரம்பு செல்கள் சாகமல் உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் அதற்கு தினமும் புதிதாக எதையாவது நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும். புதிதாகப் பிறக்கும் மூளை செல்லுக்கு வேலை கொடுக்கவில்லையானால் அது செத்துப்போய்விடும்.
இதுதான் என்றில்லை, எதை வேண்டுமானலும் கற்கலாம்; சீட்டாட்டத்தில் புதிதாக ஒரு டிரிக், செஸ் விளையாட்டில் புதிய மூவ், கித்தார் இசை, புதிதாக ஒரு ராகம், புதிய நாவல், கடினமான ஒரு கணக்கு..... குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் ஏதாவதொன்றை முயன்று கற்றுக் கொண்டிருந்தால் தினமும் தோன்றும் 10,000 செல்களில் ஒரு சிலவாவது மூளையில் நிலைத்து நிற்கும்.
பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினங்களுக்குப் பிறந்தபோது எந்த அளவு மூளை இருந்ததோ, பெரியவர்களாகும்போது அதே அளவு, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறிதாகி விடும் என்றுதான் இதுநாள் வரை பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். உடம்பில் வேறு எங்கு வேண்டுமானாலும் புதிதாக திசுக்கள் தோன்றினாலும் தோன்றலாம், மூளையில் மட்டும் அது சாத்தியமில்லை என்று 1990 வரை கருதிவந்தனர்.
எலிசபெத் கோல்டு (பெண்மணி) என்பவர் நரம்பு செல்கள் புதிது புதிதாக மூளையில் பிறக்கும் என்பதைக் கண்டுபிடித்தபின் நரம்பியலில் ஏகப்பட்ட ஆய்வுகள் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன. மூளை வளரந்து கொண்டேபோனால் கபாலம் வெடித்துவிடுமே என்று பயப்படவேண்டாம். மூளையில் காதுக் கதுப்புக்கு உள்ளே இருபுறமும் உள்ள ஹிப்போக் கேம்பஸ் என்ற உறுப்பில்தான் புதிதாக நரம்புசெல்கள் தினமும் தோன்றுகின்றன. 1998 இல் ஸ்வீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது எலிகளுக்கு மட்டுமல்ல, மனிதருக்கும் பொருந்தும் என்று தெரிந்தது. gt;
அதெப்படி நரம்பு செல்கள் புதிதாக முளைக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்? ரொம்ப சிம்ப்பிள். புரோமோ டி ஆக்ஸி யூரிடின் (Bromo deoxy uridine—BrdU)) என்ற கெமிக்கலை இரத்தத்தில் செலுத்தினால் எங்கெல்லாம் உடலில் புதிதாக செல்கள் முளைக்கின்றனவோ அந்த இடமெல்லாம் பளிச்சென்று ஒளி விடும். பச்சை நிற ஒளித்திட்டுகள் செல்கள் புதிதாகத் தோன்றியிருப்பதைக் காட்டிக் கொடுத்தவிடும். எலிகளில் சோதனை செய்தபோது ஹிப்போகேம்பஸ் பகுதியில் தினமும் 5000 முதல் 10,000 செல்கள் புதிதாகத் தோன்றுகின்றன என்பது தெரிந்தது.

மார ்ரிஸ் வாட்டர் மேஸ் (Morris Water Maze) என்று ஒரு பரிசோதனை. எலியை பால் விட்டு கலக்கிய கலங்கலான தண்ணீர்த் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். தொட்டியிலிருந்து வெளியேற அது தத்தளித்து இங்கு மங்கும் நீந்தும். ஓரிடத்தில் பிளாட்பாரம் (மேடை) சட்டென்று புலப்படாமல் மறைந்திருக்கும். ஏதேச்சையாக அதைக் கண்டுபிடித்துவிட்ட எலி அடுத்த இரண்டு மூன்று பரிசோதனையில் அதைக் கற்றுக் கொள்ளும். தொட்டியின் உள்ளே காணப்படும் அடையாளங்களை நினைவில் வைத்துக் கொண்டு ஒரே தாவில் மேடையைக் கண்டுபிடித்துத் தப்பித்தவிடும். எலிகளுக்கு பயம், எச்சரிக்கை, தப்பிக்கும் தந்திரம் போன்ற புதிய அனுபவ அறிவுகளை வழங்கிவிட்டு, மூளையில் ஹிப்போ கேம்ப்பஸில் புதிய நரம்பு செல்களை புதிதாக தோன்றுகின்றனவா என்று எண்ணிப்பார்ப்பார்கள். இதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன.
தினமும் ஆயிரக்கணக்கான நரம்பு செல்கள் வேர்செல்களிலிருந்து உருவாகி முழுவளர்ச்சியை 14 நாட்களில் அடைகின்றன. இப்படி தினமும் பத்தாயிரம் செல்களாவது முற்றி நினைவுகளைப் பதித்துக்கொள்ள தயாராக நிற்கின்றன. அன்றைய தினம் ஏதாவது நினைவில் பதிய வேண்டியதாக இருந்தால் அதற்காக ஒரு சில செல்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை உடனே அழிக்கப்படுகின்றன. மறுநாள் இன்னொரு செட் நியூரான்கள் முற்றி தயார் நிலைக்கு வருகின்றன. எத்தனை செல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்பது கற்றுக் கொள்ளும் அனுபவம், அதன் தீவிரம், அவசரம், அவசியம் ஆகியவை பொறுத்து மாறுகின்றது. அதிக சிக்கலான அனுபவங்களுக்கு அதிக செல்கள் தேவைப்படுகின்றன.
எந்த செல்லை அழிப்பது எந்த செல்லை விடுவது என்பதை நிர்ணயிப்பது அந்தந்த செல்களே. நினைவுப் பதிவில் ஈடுபடும் செல்களைத் தவிர மற்றவை அழிந்துவிடுகின்றன. நினைவு ஆக்கத்தில் சம்மந்தப்பட்ட நரம்புசெல்லில் சில மாறுதல்கள் நடைபெறுகின்றன. நரம்பு செல் எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நரம்பு செல், நீண்ட காம்புடைய மல்லிகை மொட்டுபோல் இருக்கும். காம்பினை ஆக்ஸான் என்பார்கள். மொட்டுப்பகுதிதான் செல். அதிலிருந்து நிறைய தலை முடிபோல் இழைகள் வெளிப்படும்; அவற்றை டென்ட்ரைட் என்பார்கள். நினைவு ஆக்கத்தில் ஈடுபட்ட செல்லின் ஆக்ஸானின் முனை ஹிப்போக்கேம்பஸின் ஒருபகுதியாகிய CA3 என்று இடத்துடன் தொடர்பு கொண்டுவிடும். டென்ட்ரைட்டுகள் வேறு நரம்பு செல்களுடன் தொடர்பு கொண்டுவிடும். இப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத நரம்பு செல்கள் செத்துவிடுகின்றன.

பரிசோதனையின் மூலம் எலிகளின் மூளையில் நரம்பு செல் உருவாவதைத் தடுத்தால், அவை புதிதாக சொல்லித்தருவதைக் கற்றுக் கொள்வதில்லை. MAM என்று ஒரு கெமிக்கல்; இதை உடலில் செலுத்தினால் புதிய நினைவுகள், அறிவு அனுபவம் எதுவும் பதியாது. இது நேரடியாக நரம்பு செல்கள் வளர்வதைத் தடைசெய்கிறது. எலிகளிடம் சுலபமாக இப்படி சோதனை செய்யயலாம். மனிதர்களிடம் இது சாத்தியமில்லை, இருந்தாலும் எதிர்பாரதவிதமாக சிலவாய்ப்புகள் கிடைப்பதுண்டு, மூளையில் கேன்ஸர் ஏற்பட்டவர்களுக்கு "கீமோதெராப்பி" (Chemotherepy) என்று ஒரு சிகிச்சை செய்வார்கள், வீரியமிக்க கெமிக்கல் கேன்ஸர் செல்கள் வளருவதைத் தடைசெய்யும். ஹிப்போக்கேம்பஸிலும் செல்வளர்ச்சி தடை ஏற்படுவதால், சில பரிசோதனைகளை இந்நோயளிகளிடமும் செய்து பார்க்க முடிகிறது. இதை கீமோபிரெய்ன் (Chemo brain) என்பார்கள். சிலரிடம் அல்ஷெய்மர் என்ற நரம்பு செல் நோய் இருக்கும். ஹிப்போகேம்பஸில் பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு நினைவுகள் மறப்பதும் புதிதாக எதையும் கற்றுக் கொள்ளமுடியாதிருப்பதும் தெரிகிறது.
முதுமை வரும்போதே கூடவே மறதியும், மந்த புத்தியும் வந்துவிடும். அவை வராமல் தடுக்க வேண்டுமாயின் அன்பர்களே தினமும் எதையாவது படியுங்கள், ஏரோபிக் உடற்பயிற்சி செய்யுங்கள், நண்பர்களுடன் பொழுது போக்குங்கள். செய்யக்கூடாதவை சிகரெட் பிடிப்பது, குடிப்பது, செய்யவேண்டியது உடற்பயிற்சி, பழங்கள் சாப்பிடுவது, புதிதாக கற்பது. ஆன்ட்டி டிப்ரசன்ட் மாத்திரைகள்கூட நரம்புசெல் நிலைப்பாட்டை அதிகரிக்கிறதாம்.
இந்தக் கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா. இன்றைக்கு குறைந்தது நூறு நரம்புசெல்களாவது உங்களுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் அதற்கு நான் கியாரண்ட்டி!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/10/blog-post.html"

No comments:

Post a Comment